மாயக்கல்லிமலை பிரச்சினைக்கு தீர்வுகாணவே யானையை மரத்தில் கட்டிப்போட்டிருக்கிறோம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Afham Nizam
By Afham Nizam January 5, 2018 14:58

மாயக்கல்லிமலை பிரச்சினைக்கு தீர்வுகாணவே யானையை மரத்தில் கட்டிப்போட்டிருக்கிறோம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

யானைக்கு வாக்களித்தால் மாயக்கல்லிமலையில் சிலைவைப்பார்கள் என்று, பிரச்சினை வந்தபோது அந்தப் பக்கம் தலைவைத்தும் படுக்காத சிலர் கூறிக்கொண்டு திரிகின்றனர். மாயக்கல்லிமலையில் சிலைவைத்து ஆக்கிரமிப்புச் செய்வதை தடுப்பதற்கான ஆயுதமாகவே நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறோம். அதற்காகத்தான் யானையை மரத்தில் கட்டிப்போட்டிருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் “பைஅத்” (உறுதிமொழி) வழங்கும் நிகழ்வு இன்று (05) நிந்தவூர் அமீர் மஹால் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தனதுரையில் மேலும் கூறியதாவது;
நாங்கள் யானையிடம் மரத்தை விற்றுவிட்டதாக அக்கரைப்பற்றிலுள்ள முன்னாள் அமைச்சர் நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார். யானைக்கு வாக்களித்தால், இறக்காமம் மாயக்கல்லி மலையில் சிலை வைப்பதற்கு அனுசரனை வழங்குவதாக போலிப் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார். இப்படி முதலைக் கண்ணீர் வடிப்பவர், மாயக்கல்லி மலை பிரச்சினை வந்தபோது அந்தப் பக்கம் தலைவைத்தும் படுக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம்தான் போராடி, அதை தடுத்துவைத்திருக்கிறது.
மாயக்கல்லிமலையில் இனி ஒரு தூணைக்கூட கட்டவிடாமல் தடுப்பதற்கு நாங்கள் யானைச் சின்னத்தில் போட்டியிடவேண்டும். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு இதைவிட சிறந்ததொரு ஆயுதம் இருக்கமுடியாது. யானைச் சின்னத்தில் நாங்கள் சபைகளை வென்றுகொடுத்தால்தான், மாயக்கல்லிமலை சிலைவைத்து ஆக்கிரமிப்புச் செய்வதை ஐ.தே.க. தலைமையுடன் உரிமையோடு பேசி தடுக்கமுடியும்.
அம்பாறையில் நாங்கள் தனித்துப் போட்டியிட முடியாது என்பதல்ல இதன் அர்த்தம். ஐ.தே.க. எங்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நாங்கள் அவர்கள் சார்பாக சபைகளை வென்றுகொடுக்கிறோம். இதுவொரு தேர்தல் வியூகம். அம்பாறை மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ஐ.தே.க. பட்டியல் எங்களுடையது. அதிலுள்ள வேட்பாளர்களை நாங்களே தெரிவுசெய்தோம். எமது கட்சி சார்பாக மூவினத்தைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் இதில் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம்.
3 வருடகால இடைவெளியின் பின்னர் பல இழுபறிகளுக்கு மத்தியில் இந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறுகிறது. புதிய தேர்தல் முறையினால், குறித்த வட்டராங்களுக்குள் மாத்திரம் வேட்பாளர்கள் தங்களது பிரசாரங்களை மேற்கொள்வதால் தலைவருக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கின்றது. கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் இப்போது மிகுந்த ஒற்றுமையுடன் பலமான நிலையில் இருக்கின்றனர் என்றார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது பொறுப்புகளை சமூக சிந்தனையுடன் நிறைவேற்றுவதுடன், கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமாக இருப்பதாக இதன்போது “பைஅத்” (உறுதிமொழி) வழங்கினார்கள்.
ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
Afham Nizam
By Afham Nizam January 5, 2018 14:58
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*