வெள்ளை வெள்ளையாய் பூத்துக்கொண்டிருப்பது (உம்மா ) – சோலைக்கிளியின் கவிதை !

Afham Nizam
By Afham Nizam November 23, 2017 13:22

வெள்ளை வெள்ளையாய் பூத்துக்கொண்டிருப்பது (உம்மா ) –  சோலைக்கிளியின் கவிதை !

உம்மா என்னும் போதெல்லாம்
என் வாய்க்குள்
பால் சுரக்கிறது
உம்மா என்ற சொல்
தாய்ப்பாலில் இருந்து
உருட்டி எடுத்தது

இந்தச் சொல்லை
சொல்லிச் சொல்லி
விழுங்க விழுங்க
இனிமையாய் இருக்கிறது

இந்தச் சொல்லில் இருந்துதான்
சர்க்கரை வடிக்கிறார்களா
இந்தச் சொல்லை நான் சொன்னால்
என் வாயை நோக்கி
தேன் பூச்சிகள் வருகின்றதே

உம்மா என்று சொன்னால்
என் நாக்கு
பூப் பூக்கிறது
என் வாய்
பூந்தோட்டம் ஆகிறது

அது ஓர் ஆழமான அழகான இனிக்கின்ற
சொல் மாத்திரமல்ல
என் தலைவன் என்னைச் செய்து கொடுக்க
என்னை வாங்கி
எனக்குத் தந்த சொல்

என் மூலமந்திரமாக
இப்போதும் இருக்கின்ற சொல்
என் வேரோடி நான் பெருக்க
மண் மண்ணாகி
மழைக்கு வானம் பார்த்து
உலர்ந்த சொல்

எனக்குள் எப்போதும் முத்துப்போன்ற ஒரு சொல்
இருக்கிறதென்றால்
அது உம்மாதான்
நான் மாதுளம் பழம் என்றால்
என் முத்து உம்மா

இதை அணில் கடிக்க விடமாட்டேன்
கடித்தாலும் அதில் அணிலின் பற்கள்
ஏறாது

உம்மா என்ற சொல்
எனக்கு மட்டுமல்ல
உங்களுக்கும் ஒரு பொருள்
புல்லுக்கும் ஓர் ஆயுதம்

உம்மா
உம்மா
நீ எங்கே இருக்கின்றாய்
வெள்ளைப் பூக்களுக்குள் வீடு கட்டிக்கொண்டா
என்னைத் தினமும் பார்த்த வண்ணமா

அதுதானா ஒரு மரம் எனது வாசலில்
வெள்ளை வெள்ளையாய் பூத்துக்கொண்டிருப்பது

08.11.2017-

சோலைக்கிளியின் முகநூளில் இருந்து 

Afham Nizam
By Afham Nizam November 23, 2017 13:22
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*