பவளவிழா நாயகன் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்.- வாசகனின் வாக்கு மூலம்

Afham Nizam
By Afham Nizam November 23, 2017 12:06

பவளவிழா நாயகன் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்.- வாசகனின் வாக்கு மூலம்

– நாச்சியாதீவு பர்வீன்-

காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபியுதீனை 2002 இல் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் பண்டார நாயக்க சர்வதேச நினைவு  மண்டபத்தில்  நடாத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாவின் பின்னரே எனக்கு அறிமுகம். அதற்க்கு முன்னர் அவரை ஒரு எழுத்தாளராக அறிந்து வைத்திருந்த எனக்கு அந்த உலக இலக்கிய நிகழ்வினை தலைமை தாங்கி நடாத்திய பெரும் ஆளுமையாக அவரைக்கண்டு வியந்து நின்றேன். அந்த சர்வதேச நிகழ்வில் வெறும் பார்வையாளராக இருந்த நான் இதே இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நாடாத்தும் அடுத்த சர்வதேச மாநாட்டில் ஒரு பங்காளராக இருப்பேன் என்று ஒருபோதும் நினைத்துப்பார்க்கவில்லை.

 

 

 

2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜின்னாஹ் சரிபுதீனுடனான இலக்கிய தொடர்பு வலுப்பெற்றது. மறைந்த மூத்த எழுத்தாளுமை எம்.எச்.எம்.ஷம்ஸின் பாசறையில் வளர்ந்த என்போன்ற இளைய எழுத்தார்வமிக்கவர்களுக்கு ஷம்ஸின் இழப்பு பேரிழப்பாக இருந்தது அதனை ஈடு செய்யும் மிகப்பெரிய ஆளுமையாக அந்த வெற்றிடத்தை நிரப்பும் ஒரு இலக்கியவாதியாக பிற்காலத்தில் ஜின்னாஹ் ஷரிபுதீனை திகழ்ந்தார் என்பதனை  அடையாளப்படுத்துவதில் பிழையில்லை என்றே கருதுகிறேன்.

 

 

பின்னர் மறைந்த எழுத்தாளர் ஷம்ஸ் அவர்களின் முதலாவது நினைவேந்தல் நிகழ்வு மருதானை வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் இடம்பெற்ற போது மீண்டும் ஜின்னாஹ்வை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்வில் சம்ஸ் பற்றிய இரங்கல் கவிதையொன்றை நான் வாசித்தேன். வாசித்து முடித்தவுடன் எனக்கு கைலாகு தந்து என்னைப்பாராட்டினார். அதுமட்டுமன்றுமன்றி அவரது தந்தையின் நினைவேந்தல் நிகழ்வொன்றில் கவிதை வாசிக்கும் வாய்ப்பினை எனக்களித்தார். இளைய எழுத்தாளர்களுடன் மனது விட்டுப்பேசும் மகோன்னத பண்பும், அவர்களை பாராட்டி தட்டிக்கொடுக்கின்ற தாராள மனமும்  அவரிடம் காணப்படுகின்ற சிறப்பம்சமாகும்.இதன்பின்னர்  காப்பியக்கோவுக்கும் எனக்கும் மிகவும் நெருங்கிய உறவு இலக்கிய ரீதியிலும் நட்பு ரீதியிலும் குடும்ப ரீதியிலும் ஏற்பட்டது.

 

 

என்னையும் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தில் இணைத்துக்கொள்ளும் தமிழ் மாமணி அஷ்ரப் ஷிஹாப்தீனின் பிரேரணையை மனமுவந்து ஏற்றுக்கொண்டார். அனுராதபுரம் போன்ற பெரும்பான்மையான சிங்கள மொழி பேசுகின்ற சமூகம் வாழுகின்ற பிரதேசத்தில் தமிழ் இலக்கிய விழாவொன்றினை செய்ய வேண்டும் என்ற பேரவா அவரிடம் இருந்தது. இது தொடர்பிலான இரண்டு கலந்துரையாடல்களை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமும் -அனுராதபுர கலை இலக்கிய வட்டம்-அனுராதபுர நண்பர்கள் கலைஇலக்கியக் குழு ஆகியன மேற்கொண்டன இருந்தும் அது இன்னும் சாத்தியப்படவில்லை என்பது பெருங்கவலை தரும் விடயமாகும்.இப்போதும் சந்திக்கின்ற போதுகளிலும் அல்லது பேசுகின்ற போதுகளிலும் அதுபற்றி பேசுவார் எதிர்காலத்தில் அதுசாத்தியப்படுமானால் அதன் பின்னனியில் காப்பியக்கோவின் தூண்டுதலே பிராதான பங்கு வகிக்கும்.

 

 

இளைய,புதிய எழுத்தாளர்களுடன் சாமந்திரமான நட்பையும் உறவையும் பேணிவரும் ஜின்னாஹ் ஷரீப்தீன் தமிழ் இலக்கிய பரப்பிற்கு அதிகமான காப்பியங்கள் தந்து சாதனை படைத்த ஒரு எழுத்தாளராவார். இவரது காப்பியங்கள் இலங்கை அரசின் உயர் விருதான சாகித்திய மண்டல விருதினை பெற்றுள்ளதோடு கடல்கடந்து வாழுகின்ற தமிழ் புலங்களில் சிலாகித்து பேசப்பட்டவையாகும். இவரது மஹ்ஜபீன் காவியம் மற்றும் பண்டார வன்னியன் காவியம் என்பன காப்பியக்கோவின் இலக்கிய முதிர்ச்சியையும் தமிழ் செய்யுள் இலக்கியத்தில் அவருக்கிருக்கின்ற மிகநுட்பமான அறிவினை வெளிப்படுத்தி நிற்பது குறிப்பிடத்தக்கது.

 

 

கடந்த 2011 இல் காயல்பட்டிணத்தில் நடைபெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் இவரது இரண்டு நூல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. தமிழ் நாட்டின் சில பல்கலைக் கழகங்களில் இவரது நூல் பாடப்பரப்புக்குள் உள்வாங்கப்பட்டிருப்பதும். தமது முனைவர் பட்டத்துக்கான ஆய்வாக பல பல்கலைக்கழகம் சார் புத்திஜீவிகள் இவரது நூல்களை ஆய்வு செய்துள்ளமையும் இங்கு குறிப்பிட்டு கூறவேண்டிய முக்கிய அம்சமாகும்.

 

 

புலவர்மணி ஆ.மு,ஷரீப்தீனின் வாரிசான பவளவிழா நாயகன் காப்பியக்கோவுடன் 2011 காயல்பட்டிண மாநாட்டுக்கும், கடந்த வருடம் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடாத்திய இஸ்லாமிய இலக்கியப்பொன்விழா தொடர்பிலான பேராளர்களை இணைத்துக்கொள்ளும் நோக்கிலான இந்திய,மலேசிய,சிங்கப்பூர் பயணங்களில் இணைந்து சென்றுள்ளேன். இந்தப்பயணங்களின் போது காப்பியக்கோ ஜின்னாஹ் அவர்களின் தாராளத்தன்மையும்,அறிவின்  முதிர்ச்சியும் என்னைஆச்சரியத்தில் ஆழ்த்தின.அடுத்தவர்களை மதிக்கின்ற நேசிக்கின்ற அடிப்படை மனிதாபிமான பண்பு ஜின்னாஹ்வின் பலமாகும்.

 

எமது பயணம் தொய்வடையாமல் அதனை மகிழ்ச்சிக்குரியதாக மாற்றியதில் காப்பியக்கோவின் பங்களிப்பு மகத்தானது. மலேசியாவில் கோலாலம்பூர் பல்கலைக்கழகத்தில் அங்குள்ள தமிழ்த்துறை பேராசியர்களுடனான சந்திப்பின் போது அவர்களிடம் என்னைப்பற்றி மிக உயர்வாக கூறி என்னை கண்கலங்க வைத்தார். கடந்த 2011 இல் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடாத்திய இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா நிகழ்வில் கவியரங்கத்தில் கவிபாடவேண்டும் என்று என்னை ஊக்கப்படுத்தியதோடு நான் கவிதை பாடி முடிந்தவுடன் என்னை கட்டி அனைத்து தமது வாழ்த்துக்களை சொன்ன இருவரில் முதலாமவர் காப்பியக்கோ ஜின்னா ஆவார்.மற்றவர் இந்தியாவை சேர்ந்த  பேராசியர் சே.மு.முஹம்மதலி ஆவார்கள்.

 

 

உலக அளவில் தமிழ் மொழியில் பத்திற்கும் மேற்பட்ட காப்பியங்களை வெளியிட்ட ஒருவர் காப்பியக்கோ மட்டும் தான். அதையும் தாண்டி சிறுகதை சிறுவர் இலக்கியம்,பத்தி எழுத்து, நாவல்,விமர்சனம் என தமிழ் இலக்கியத்துறையின் எல்லாத்தளங்களிலும் இவர் ஆழக்கால் பதித்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.  ஒரு மருத்துவரான ஜின்னாஹ் அயராத தனது பணிகளுக்கிடையில் ஊற்றெடுத்து ஓடுகின்ற காட்டாறாக ஓயாமல் எழுத்துப்பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

அவருக்கு 75 வயது என்பது வெறும் எண்களால் கணக்கிடக்கூடியது மட்டுமே.மாறாக இன்னும் சுறுசுறுப்பான இளைஞனாக அவரது இயக்கம் மனதளவிலும்,உடளவிலும் அவருக்கிருக்கும் வலிமையை புடம்போட்டுக் காட்டுகின்றது. இவரது தொடரான இலக்கிய பங்களிப்பின் பின்னணியில் இவரது துணைவியாரின் பங்களிப்பானது சிலாகிக்கத்தக்கதாகும். எப்போதும் புன்னகையுடன் வரவேற்கும் அந்தத்தாய் காப்பியக்கோவின் வெற்றிக்கு ஆணிவேராய் அமைந்துள்ளார் என்பதை ஜின்னாவே ஒத்துக்கொள்வார். மிகவும் சுவையான உணவு சமைக்கக் கூடிய அவரது சாப்பாட்டை ஜின்னாஹ்வின் வீட்டுக்கு செல்பவர்கள் தவறவிட்டிருந்தால் அவர்கள் துரதிஷ்டசாலிகளே.

 

 

 

கடந்த 2011 டிசம்பர் மாதம் 11,12,13 இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்ற இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நாடாத்திய உலக   இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா நிகழ்வில் ஆய்வகத்தின் தலைவர் காப்பியக்கோ ஜின்னாவே தலைமை வகித்தார் இதன் மூலம் 2002,2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய விழாக்களுக்கு தலைமை தாங்கிய பெருமை அவரைச்சாரும். தமிழ் சங்கத்தின் ஆட்சிக்குழுவில் கடந்த 20 வருடங்களாக வெவ்வேறு பதவிகளை வகித்து வரும் ஜின்னாஹ் ஷரீப்தீன் முதுபெரும் ஆளுமை என்பதில் மாற்றுக்கருத்துகள் கிடையாது. காப்பியமும்,கவிநயமும் காலாவதியாகி கவிதைப்புலம் வேறுதலம் நோக்கிய நகர்வில் வேகமாக பயணிக்கின்ற போது தமிழாக்கியத்தியின் முதுசமான காப்பியங்களை இன்னும் உயிர்ப்புடன் எழுதி சாதனை படைத்தது வரும் ஜின்னாவை நாமும் வாழ்த்துவோம்.

 

 

அந்த இலக்கிய விழாவை வெற்றியுடன் நாடாத்தி முடிக்க வேண்டும் என்கின்ற அயராத அர்ப்பணிப்பு அவரிடம் காணப்பட்டது, அவரும் இயங்கிக்கொண்டு எம்மையும் தமது ஆலோசனைக்கூடாக வழிநடத்திய பாங்கு அவர்மீதான அதிக மதிப்பை உண்டு பண்ணியது. முரண்பாடுகள்,உடன்பாடுகள்,மாற்றுக்கருத்துக்கள்,மனஉளைச்சல்கள் இப்படி எழுகின்ற சின்னச்சின்ன மனத்தாங்கல்களை மிகவும் சாதுரியமாக கடந்து போகின்ற அல்லது அதனை ஒன்றுமே இல்லை என்று ஆக்குகின்ற திறன் அவருக்கே உரித்தான சிறப்பியல்பாகும்.

 

 

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீப்தீன் எனும் தமிழ் இலக்கிய ஆளுமையின் 75வது வயதினை முன்னிட்டு கொண்டாடப்படுகின்ற பவளவிழா நிகழ்வில் காப்பியக்கோவின் இலக்கிய பணிகள் மற்றும் காப்பியக்கோ பற்றிய மற்றவர்களின் மனப்பதிவு என்பன நூலாக்கப்பட்டு “காப்பியக்கோ” நூல் வெளியீடும் அவரது பவள விழாவும் எதிர்வரும் ஞாயிறு 26/11/2017 பி.ப. 4.30க்கு கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. தமிழ் இலக்கிய புலத்தில் ஆர்வத்துடன் செயலாற்றும் கவிஞர்கள்,எழுத்தாளர்கள், விமர்சகர்கள் ஆகியோருக்கு இந்நூல் ஜின்னாவின் இன்னொரு முகத்தை அடையாளப்படுத்தும் என நம்பலாம். விழா சிறப்பாக நடைபெறவும், காப்பியக்கோவின் படைப்புக்கள் இன்னுமின்னும் வெளிவரவும் இறைவனை பிரார்த்திப்போம்.

 

 

அவருக்கும் எனக்கும் மலேசியாவில் இடம்பெற்ற 12 ரிங்கிட் கதை இருக்கிறது அதை மட்டும் என்னவென்று யாரும்

கேட்காதீர்கள்.

Afham Nizam
By Afham Nizam November 23, 2017 12:06
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*