முஸ்லிம் காங்கிரஸிலிருந்து 27 பேர் துரத்தப்பட்டார்களா?- பிரதியமைச்சர் அமீர் அலியின் குற்றச்சாட்டுக்கு பதில்.

farsan
By farsan July 17, 2017 07:05

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து 27 பேர் துரத்தப்பட்டார்களா?- பிரதியமைச்சர் அமீர் அலியின் குற்றச்சாட்டுக்கு பதில்.

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து மர்ஹும் அஷ்ரஃப் மனைவி தொடக்கம் ஹசனலி வரை 27 பேர் கட்சியை விட்டு துரத்தப்பட்டுள்ளதாக அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்கள் நிகழ்வொன்றின் போது கருத்துத் தெரிவித்திருந்தார்.

நாங்கள் அன்று சொன்னோம். அதையே இப்போது துரத்தப்பட்டவர்களும் சொல்வதாகவும் கூறியிருக்கிறார். இவ்வாறு பேசுவதால் வரலாற்றை மறைத்து துரோகங்களை, தியாகங்களாக மாற்றி மக்களின் அனுதாபங்களைப் பெறவும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை குற்றஞ்சாட்டவும் முயற்சிக்கிறார் என்பது தெளிவான உண்மையாகும்.
முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றை ஒரு கனம் திரும்பிப்பார்தால், இவர்களின் கூற்றுக்கள் அப்பட்டமான பொய்கள் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பக்கட்டங்களில் தலைவருடன் தோளோடு தோள் நின்று உழைத்தவர் தலைவரின் நெருங்கிய நண்பன் சேகு இஸ்ஸதீன் என்பதை சகலரும் அறிவார்கள். அவர் பிற்பட்ட காலங்களில் அதிகாரங்களை நோக்கி நகர்ந்ததும், கட்சிக்கும் தலைமைக்கும் கட்டுப்படாமல் நடந்ததன் காரணமாகவுமே அன்றைய தலைவர் மர்ஹும் அஷ்ரஃப் அவர்களால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பதுடன், இவ்வாறு சிலரும் அவர்களின் தவறான கட்சிக்கெதிரான செயற்பாடுகள் காரணமாக மர்ஹும் அஷ்ரப் அவர்களால் வெளியேற்றப்பட்டார்கள் என்பது சகலரும் அறிந்த விடயம்.
மர்ஹும் தலைவர் அஷ்ரஃப் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து கட்சிக்குள் இரட்டைத்தலைமைத்துவம் ஏற்படுத்தப்பட்டது. அதில் ஒருவராக மறைந்த தலைவரின் பாரியார் பேரியல் அஷ்ரப் அம்மையார் இருந்தார். இரட்டைத் தலைமைத்துவத்திற்குள் பிரச்சனை ஏற்படவே முக்கியஸ்தர்கள் சமரச முயற்சிகளில் ஈடுபட்டு மர்ஹும் தலைவர் அஷ்ரஃப் அவர்களால் உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணி என்ற கட்சி பேரியல் அஷ்ரப் அம்மையாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பேரியல் அஷ்ரப் அம்மையாரிடம் ஒப்படைக்கப்பட்ட கட்சி அவராலேயே கலைக்கப்பட்டது. பின்னர் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து அதன்  அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டார்.
முஸ்லிம் காங்கிரஸை அன்று பொறுப்பேற்ற தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமூகத்திற்காக அன்று ஆளுங்கட்சியை எதிர்த்தார். இதன் விளைவாக எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக மாறிய வரலாறுமுண்டு.
இதனால் ஆத்திரமடைந்த அன்று ஆட்சிபீடத்திலிருந்த சந்திரிக்கா அம்மையார், தனது பிரித்தாலும் தந்திரங்களைப் பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரஸைப் பிரித்து அழிப்பதற்கு அந்த கட்சிக்குள்ளிருந்த பதவி மோகம் கொண்டவர்களை அடையாளங்கண்டு, அவர்களைப் பயன்படுத்திக் கொண்டார்.
அவர்களும் தலைமைக்கெதிராக பழிகளைச்சுமத்தி கட்சியை உடைத்து வெளியேறினார்கள். அதற்குச் சன்மானமாக தனிக்கட்சி ஆரம்பித்து சிலர் அமைச்சு, பிரதியமைச்சுகளையும் பெற்றுக் கொண்டார்கள். இன்னும் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியலைப் பெற்றுக் கொண்டு மீண்டும் அது தங்களிடமிருந்து பெறப்படலாம் என்பதற்காகவும் கட்சி மாறிச் சென்றார்கள்.
இவ்வாறு தங்களின் தனிப்பட்ட நலன்களை முன்னிலைப்படுத்தியே கட்சி மாறிச்சென்றார்கள். அவர்கள் போகும் போது சமூகம் தங்களை பழிக்காமலிருக்க தலைமை மீது வீண்பழி சுமத்திச்சென்றார்கள். அவர்கள் தான் இன்று கடந்த கால தங்களின் செயற்பாடுகளை மறந்து, இவ்வாறான கருத்துக்களை பொது மேடைகளில் கூறி, தாங்கள் எடுத்த தனிப்பட்ட நலன்சார் முடிவுகளுக்கு நியாயம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் இவ்வாறான கருத்துக்களின் உண்மைகளை மக்கள் என்றோ புரிந்து கொண்டார்கள் என்பதை அடுத்தடுத்து வந்த தேர்தல்கள் எடுத்துச் சொன்னதை மறந்து விட்டு, மக்களிடம் அனுதாபம் தேடி தங்களின் சரிந்து போன செல்வைக்கைச்சரி செய்து கொள்ளலாம் என்பது இவர்களின் பகற்கனவு.
இவ்வாறானவர்களின் வழியைப் பின்பற்றி இன்றும் சிலர் தாங்கள் எதிர்பார்த்த அதிகாரம் கிடைக்கவில்லையென்பதற்காக கட்சியையும், தலைமையையும் குற்றஞ்சொல்லி பிரிந்து சென்றதுடன், தலைமைக்கெதிராக தங்களின் செயற்பாடுகளை அமைத்துக் கொண்டதன் காரணமாகவுமே அவர்கள் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்களே தவிர, அவர்கள் கட்சியாலோ தலைமையினாலோ துரத்தப்படவில்லை.
ஓட்டமாவடி எம்.என்.எம் யஸீர் அறபாத்.
farsan
By farsan July 17, 2017 07:05
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*