முஸ்லிம் கூட்டமைப்பு-கனவில் கட்டும் தேன்கூடு -01.

farsan
By farsan July 17, 2017 05:47

முஸ்லிம் கூட்டமைப்பு-கனவில் கட்டும் தேன்கூடு -01.

-நாச்சியாதீவு பர்வீன்-

தேன் ஒரு இனிமையான சுவையான பண்டமாகும். தேனைவிரும்பாதவர்கள் இந்த உலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்.

தேன் ஒரு நோய் நிவாரணியாகும். தேனைத்தொட்டவன் கையை நக்குவான் என்கின்ற கிராமிய பழமொழி ஒன்றும் வழக்கத்தில் உள்ளது. இதன் மூலம் தேனின் பெறுமதியும் இனிமையும் தெளிவாகின்றது. உண்மையிலேயே தூய்மையான தேனை சுவைத்து உண்பவர்கள் அதிஷ்டசாலிகள் எனலாம்.
ஆனால் உறக்கத்தில்  தேனை உண்ணுவது போன்று  கனவு காண்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தேனின் சுவையை உணர்ந்து தேன்கூட்டினை கனவில் அமைத்து அங்கே கனவினிலேயே தேனீக்களை வளர்த்து தேனை உற்பத்தி செய்து அதனை ரசித்து ருசித்து உண்ண முடியும் என்பதே இவர்களின் நினைப்பு. இந்த கனவில் கட்டும் தேன்கூடானது கனவு கலையும் மட்டுக்குக்கும் இருக்கும் ஒன்றாகும். கனவு கலைந்ததன் பின்னர் விழித்துப்பார்த்தால் நாம் கண்டது கனவென்றும் தேன் தின்றது கனவில் என்றும் புலப்படும்.
இந்த கனவுக்கூட்டை வாயால் கட்டி அதனை கனவில் மட்டுமே சுவைத்து இன்பம் அனுபவிக்கின்ற  கோமாளித்தனத்தை கனகச்சிதமாக அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள் கனவில் தேன் கூடு காட்ட நினைக்கின்றவர்கள்.
இனி விடயத்துக்கு வருவோம். கிழக்கில்  கிழக்கின் எழுச்சி என்ற கோசத்தின் வீழ்ச்சியை தொடர்ந்து முஸ்லிம் கூட்டமைப்பு பற்றி பரவலாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து தேசியப்பட்டியல் தனக்கு கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக கட்சியை விட்டு வெளியேறிய   முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் , தேசியப்பட்டியலுடன், முழுஅதிகாரம் கொண்ட செயலாளர் நாயகம் பதவி இரண்டையும் தனக்கு தரவில்லை என்ற காரணத்தினால் கட்சியின் மீதான அதிருப்தியில் வெளியேறியிருக்கும்  முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலி, அமைச்சர் ஹக்கீமின் தலைமைத்துவம் சரியில்லை என்று அடுத்தடுத்து சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கடந்த பொதுத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, பெருந்தலைவர் அஷ்ரபினால் கட்சியை விட்டு வெளியேற்ற பட்ட சேகு இஸ்ஸதீன் ஆகியோருடன் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி இவர்கள்தான் முஸ்லிம் கூட்டமைப்பின் பங்குதாரர்கள்.
அரசியலை வியாபாரமாக்குகின்ற இந்த முஸ்லிம் கூட்டமைப்பானது காலத்திற்கு பொருத்தமா? இல்லையா? என்கின்ற கேள்விகளுக்கப்பால் இதனை நிறுவ வருகின்றவர்களின் நிகழ்கால அரசியல் நடத்தை  தொடர்பில் ஆராய்கின்ற போது கூட்டணி ஒன்றினை அமைத்து இணைந்து செயலாற்றுவதில் இருக்கின்ற நடைமுறைச் சிக்கல் பற்றி தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். அத்தோடு இந்தக் கூட்டணியின் நோக்கம் முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வேண்டுமென்றோ அல்லது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென்றோ இல்லை மாறாக இங்குள்ள ஒவ்வொரு அணியினருக்கும் அல்லது தனிப்பட்ட கட்சிக்கும் அல்லது தனிப்பட்ட நபருக்கும் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்கள் காணப்படுகின்றன.
அதில் ஓன்றுதான்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை பலவீனப்படுத்துவதன் மூலம் எப்படியாவது அதிகாரத்திற்கு வந்துவிட முடியும் என்கின்ற நிலைப்பாடாகும். இதனை மிகத்தெளிவாக நாம் நிறுவமுடியும்
 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூலம் மூன்று தடவைகள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொண்டு அதன்மூலமான அனைத்து சலுகைகளையும்,வரப்பிரசாதங்களையும்  அனுபவித்துக்கொண்டு நான்காவது தடவை தனக்கு தேசியப்பட்டில் கிடைக்க வில்லை என்கின்ற ஒரே காரணத்திட்காக அந்தக் கட்சியை விட்டு வெளியேறி தலைமையை காட்டமாக விமர்சிக்கின்றார் முன்னாள் தவிசாளர்  பஷீர் சேகுதாவூத் ஒருவாதத்திற்காக வைத்துக்கொள்வோம் முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் இவருக்கு வழங்கப்பட்டிருந்தால் இன்றுமட்டுக்கும் இவர் தலைமையை புகழ்ந்து கொண்டும் கட்சியின் தீவிர விசுவாசியாக நடித்துக்கொண்டும் தான் இருப்பார் என்பது வெளிப்படையான உண்மையாகும்.
எனவே தலைவர் மீதான பாரிய குற்றச்சாட்டை முன்வைத்து மிரட்டி அடிபணிய வைக்க முடியும் என்கின்ற கோதாவில் வன்முறை கலந்த அவரது செயற்பாடானது ஆரம்பத்தில் சலசலப்பை உண்டு பண்ணினாலும் பின்னால் எல்லாம் புஷ்வாணம் ஆகிப்போனது. கட்சியின் மூலம் பதவி அந்தஸ்த்து கிடைத்த போது எழாத சமூக அக்கறையானது தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றவுடன் பீறிட்டு வெளியாகியதுதான் வேடிக்கையான விடயம். எனவே முஸ்லிம் காங்கிரஸினை திட்டிஅதன் தலைமைத்துவத்தின் மீது அபாண்டங்களை சுமத்துவதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதிருப்தியாளர்கள் குழுவினை திருப்த்திப்படுத்த முடியும் என்று கணக்கு போடுகிறார் தமிழ் வாத்தியாரான  பஷீர் சேகுதாவூத்.
அத்தோடு மக்கள் செல்வாக்கு இழந்தவர்கள், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், முஸ்லிம் காங்கிரஸ் எதிரணி ஆகியோரை வைத்து எப்படியும் மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்கின்ற கட்சிகளோடு இணைந்து ஒரு மாகாண அமைச்சைப் பெற முடியும் என நம்புகின்றார் முன்னாள் தவிசாளர். அல்லது எதிர் வருகின்ற காலங்களில் எப்படியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூலமாக எந்த சந்தர்ப்பமும் கிடைக்காது என்கின்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டு ஏனையவர்களின் முதுகில் ஏறி எப்படியாவது பாராளுமன்ற கதிரையை பிடித்துவிட வேண்டும் என்கின்ற மனக்கணக்கில்தான் அவரது காய்நகர்த்தல் நடைபெறுகின்றது.
எனவே பஷீர் சேகுதாவூத் என்கின்ற தனிமனிதன் இதுவரைகாலமும் பதவியிலும் அதிகாரத்திலும் இருந்த காலத்தில் முஸ்லிம் சமுகத்தின் உரிமைகள் தொடர்பில் எடுத்த முன்னெடுப்புக்கள் எதுவுமே இல்லை அவ்வாறே அபிவிருத்தியும் பெரிதாய் சொல்லிக்கொள்ளுமளவில் இல்லை.இப்போது பதவி மோகம் சமூகம் பற்றியும் அதன் உரிமை பற்றியும் அவரை பேச வைக்கின்றது. இருந்தும் மக்கள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள் அவரது எண்ணம் எதனை இலக்காக கொண்டுள்ளது என்பது சிதம்பர ரகசியம் கிடையாது.
இந்த முஸ்லிம் கூட்டமைப்பு எனும் கோசத்தின் பின்னணியில் நிழலாக நின்று செயற்படுகின்றவர்களில் அடுத்து மிக பாத்திரத்தை வகிப்பவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலி. ஹசன் அலி அவர்கள் பெரும் தலைவர் அஸ்ரப் அவர்களின் காலத்திலிருந்து கட்சின் மிகமுக்கிய தூணாக இருந்தவர். இன்றைய தலைவர் அமைச்சர் ஹக்கீமுக்கு கட்சியைப் பலப்படுத்துவதில் உறுதுணையாக இருந்தவர். இவரும் இரண்டு தடவைகள் ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸின் தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்ற கதிரையை அலங்கரித்தவர். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலங்கள் கட்சியின் செயலாளர் பதவியினை வகித்தார்.
அதிகாரத்தை பரவலாக்கும் நோக்கிலும் இரண்டு அதிகார மையங்கள் ஒரே தலத்தில் இயங்குவது கட்சியின் இறையாண்மைக்கு பாதகம் என்கின்ற அடிப்படையிலும் செயலாளர் பதவியில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. ஆனால் தேசியப்பட்டியல் விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை மிகவும் நேர்மையாக வாக்களித்ததன் பிரகாரம் ஹசன் அலி அவர்களுக்கு வழங்க முன் வந்தது இருந்தும் ஹசன் அலி அவர்களின் எதிர்பார்ப்பு வேறுவிதமாக இருந்தது. சகல அதிகாரங்களும் கொண்ட செயலாளர் பதவியுடன் அமைச்சு அந்தஸ்துள்ள ஒரு முழுமையான அமைச்சு. இந்த எதிர்பார்ப்பினை ஏககாலத்தில் நிறைவேற்ற முடியாத பின்னல் நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்தது ஆனால் ஹசன் அலி அவர்கள் அவசரமாக கட்சியின் கட்டுக்கோப்பை உடைத்து கட்சியை விமர்சிக்கின்ற வகையில் செயற்படுகிறார் என்கின்ற விமர்சனம் இப்போது எழுந்துள்ளது.
ஹசன் அலிக்கான  ஆதரவுத் தளமொன்று  கட்சித்தொண்டர்கள் மத்தியில் இருக்கின்றது. கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலரின் ஆதரவை பெற்றவர் அவர் ஆனால் அவரது பிரச்சினைனையை கட்சிக்குள் வைத்து தீர்த்துக்கொள்ளும் பக்குவம் அவரிடம் இருக்கவில்லை.கட்சியை வெளித்தலத்தில் கொண்டு சென்று விமர்சிக்கின்ற பாங்கானது அவர்மீதான அபிமானத்தை தொண்டர்கள் மத்தியில் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. என்னதான் உள்வீட்டுப் பிரச்சினையாக இருந்தாலும் அதனை சாமர்த்தியமாக தீர்க்கின்ற வழிவகைகளை அவர் ஆராய்ந்திருக்கலாம். கட்சியின் சிரேஷ்ட போராளியான அவர் கட்சியை பலவீனப்படுத்துவதன் மூலம் தமது கோரிக்கைகளை வென்றெடுக்க வியூகம் வகுத்திருந்ததானது அவர்மீதான நல்லபிமானத்தின் மீது அழியாத வடுவொன்றை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் அவருக்கான கதவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் தேசிய இயக்கத்தினுள் திறந்தே கிடக்கிப்பதாக அறியக்கிடைக்கிடைக்கிறது. அவருக்கான தேசியப்பாட்டியலும் இன்னும் காத்துக்கிடக்கிறது அவர் விரும்பினால் நாளைக்குகூட கட்சியினுள் நுழைந்து விட முடியும். மாறாக முஸ்லிம் கூட்டமைப்பு எனும் சகதிக்குள் விழுந்து தனது கறைபடாத அரசியல் வாழ்வினை அழுக்காக்கிக் கொள்வாரா? என்கின்ற கேள்வியும் இருக்கின்றது  அத்தோடு பதவிக்காகவே இத்தனை காலமும் ஹசன் அலி கட்சியில் ஒட்டியிருந்தார், பதவியில்லை என்றவுடன் அவரும் பஷீர் சேகுதாவூத் போல களத்தில் இறங்கிவிட்டார் என்கின்ற அவப்பெயர் காலமெல்லாம் அழியாமல் கிடக்கும்.
ஒருவேளை முஸ்லிம் கூட்டமைப்பு சாத்தியப்படுமேயானால் அதில் குளிர்காய பலர் இப்போது முண்டியடித்துக் கொண்டிருக்கையில் ஹசன் அலிக்கு எவ்விதமான பாத்தியமும் கிடைக்கப்போவதில்லை மாறாக அவரை பகடைக்காயாக பாவித்து சில நூறு வாக்குகளை பெற்றுக்கொள்வதே அவர்களின் நோக்கம். “எறிகிற நெருப்பில் பிடுங்குவது இலாபம்”  என்பது தான் இங்கு ஹசன் அலியின் பாத்திரமாகும்.
ஏற்கெனவே கிழக்கில் பலமிழந்து போயுள்ள முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் இப்போது அதிகாரமிழந்து பல்லுப்பிடுங்கப்பட்ட பாம்பின் நிலையில் தான் இருக்கிறார். ஒருசிற்றரசனாக வலம் வந்த அவரின் பலம், கடந்த பொதுத்தேர்தலில் அவர் படுதோல்வி அடைந்ததன் பின்னர் அழிந்து போனது.பொது ஜன ஐக்கிய முன்னணியின்  தேசியப்பட்டியல் கிடைக்கும் என்று எண்ணினார் அதுவும் கிடைக்கவில்லை . பிறகு கிழக்கின் ஆளுநர் பதவிமீதான அவரது எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது.    மீண்டும் ஏதாவது ஒருவகையில் பாராளுமன்ற கதிரையை முத்தமிட முடியாதா என்கின்ற கனவில் மிதந்த அவருக்கு, அவரது அதிஷ்டத்தை சுரண்டிப்பார்க்கின்ற ஒரு ஆறுதல் அளிக்கும் சந்தர்ப்பமாக இந்த முஸ்லிம் கூட்டமைப்பு என்கின்ற கோஷம் இருக்கிறது.
எனவே எப்படியாவது நொண்டிக்குதிரையில் ஏறியாவது மீண்டும் ஆகக்குறைந்தது மாகாணசபை எல்லையையாவது தொட்டுப்பார்க்க முடியாதா? என்ற பேராசை  முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வுக்கு இருக்கிறது எனவே இழந்து போன செல்வாக்கினை மீளக்கட்டியமைக்கின்ற அந்த நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துகின்ற எத்தனிப்பிலேயே அவரது கவனம் முழுவதும் இருக்கும்.
இந்தக் கூட்டமைப்பின் இன்னுமொரு பங்காளராக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி குறிப்பிடப்படுகிறார். அரசியலில் எதனைப் பேச வேண்டும் எதனைப் பேசக்கூடாது என்கின்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர் இவர். ஆவேசமாக பேசுவதும், இளைஞர்களை வன்முறைக்கு தூண்டுவதும் மட்டுமே அரசியல் என்று நினைத்து முட்டாள் தனமாக செயற்படுபவர். கடந்த மத்திய மாகாண சபைத்தேர்த்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் அவருக்கு வாக்களித்த மக்களுக்கு தெரிந்து போனது இவர் ஒரு புஷ்வாணம் என்று. இவரது சகோதரர் இலங்கையில் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இருப்பதாக தகவல் வழங்கினார். அவரது சகோதரி பொதுபலசேனா அமைப்பினரிடத்தில் சென்று உதவி கோரினார்.
இன்னும் பொதுபலசேனா அமைப்புக்கும்  அசாத் சாலிக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று நிலவுவதாகவும், அதனாலேயே பொதுபலசேனா அமைப்பினர்  ஆசாத் சாலியை பிரபல்யப்படுத்தும் நோக்கில் அவ்வப்போது அவரின் பெயரினை சும்மா இழுத்துவிடுவதாகவும் ஒரு கதை நிலவுகின்றது இந்தவிடயம் பொதுமக்கள் மத்தியிலும் பரவலாக பேசப்படுகின்றது. எனவே அரசியல் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாத வெறுமனே வாயால் வடைமட்டும் சுடுகின்ற ஆசாத் சாலி தானும் அரசியல் செய்கின்றேன் என்பதனை நிறுவுவதற்காகவும் வேறு போக்கிடம் இல்லாத ஒரு காரணத்திற்காவும் இந்த கூட்டணியில் இணைய முயற்சி செய்கிறார் என்பது புலனாகின்றது.
அடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக செயலாளர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன். இவர் பெருந்தலைவர் அஸ்ரப் அவர்களின் காலத்திலேயே அவருடன் முரண்பட்டு கட்சியை விட்டு வெளியேறியவர். தவிசாளர் பதவி காலியானவுடன் அதனை பெற்றுக்கொண்டு மீண்டும் கட்சியில் இணைய ஆசைப்பட்டதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் அவரது தளம்பலான போக்கு அவர்மீதான அபிமானத்தை கட்சிக்குள்ளும் வெளியேயும் அவர்மீதான ஆழமான விமர்சனங்களை விதைக்க வழிவகுத்தது.
பத்திரிகைப் பேட்டிகளில் இன்றைய நிகழ்கால அரசியல் களத்திற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீமே மிகப்பொருத்தமான தலைவர்,அவரினால் மாத்திரமே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் மக்கள் பேரியக்கத்தை காக்க முடியும் என்று கூறுகின்ற அவர் அடுத்த நாள் எங்கோ ஒரு மேடையில் முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும், கட்சியை சீர் செய்ய வேண்டும் என முன்னுக்குப்பின் முரணாக கதை சொல்லுகின்ற போக்கை வளமையாக்கிக் கொண்டவர். இப்போது மேடைகளில் முஸ்லிம் காங்கிரசை விமர்சிப்பதன் மூலம் தனது இழந்து போன செல்வாக்கினை அடைய முடியும் என்கின்ற நப்பாசையில் மேடைகள் தோறும் கவிதை வாசித்து வருகிறார். இவர் மக்களால் நிராகரிக்கப்பட்டு மிக நீண்ட காலமாகிய விடயம் இவருக்கு இன்னும் தெரியாமலிருப்பது கவலையான விடயமாகும்.
இனி இந்தக் கூட்டமைப்பின் மிக முக்கிய பங்காளர்களாக கருதப்படுகின்ற அமைச்சர் றிசாத் பதியுதீனின்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தொடர்பில் ஆராய்வோமானால்  கடந்த பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் அண்ணளவாக 34 ஆயிரம் வாக்குகள் எடுத்தன இதன் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் காலூன்றி விட்டதாக ஒரு பிரமை உருவாக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தை தாண்டி வாழ்கின்ற முஸ்லிம் வாக்காளர்கள் இதனை ஒரு சாதனையாக பார்த்தார்கள்.ஆனால் அம்பாறை மாவட்ட அரசியல் வரலாற்றைப் பார்க்கின்ற போது எல்லாத் தேர்தல்களிலிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக சுமார் 30 ஆயிரம் வாக்குகள் தொடர்ந்தும் பதியப்பட்டே வந்துள்ளன.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறைமாவட்டத்தில் அமைச்சர் அதாவுல்லாஹ் பொதுஜன ஐக்கிய முன்னணியில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அவருக்கான வாக்குவங்கியில்  சுமார் 70%  மானது மயில் சின்னத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வாக்கு வங்கியில் எவ்வித தொய்வும்  ஏற்படவில்லை.
அத்தோடு அம்பாறை மாவட்டத்தை பொறுத்தமட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பலமான அணியாகவே தனித்து களமிறங்கியது முஸ்லிம் காங்கிரசின் மூலம் மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்த எஸ்.எச்.எம்.ஜெமீல், கல்விமான் வி.சி.இஸ்மாயில், எஸ்.எஸ்.பி. பொத்துவில் மஜீத், கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீரா சாஹிப், கட்சியின் முன்னாள் செயலாளர் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட்  என்று முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலகிச் சென்றோரின் பெரும் படையணி தேர்தல் களத்தில் இணைந்து செயலாற்றின.
இதில் எஸ்.எச்.எம். ஜெமீல் கடந்த மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்டு வெற்றியீட்டினார். தனக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று மல்லுக்கு நின்றார். தலைவர் ஹக்கீமுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்வதற்கான முஸ்தீபுகளை செய்து மூக்குடைபட்டார். அவரது முதலமைச்சர் கனவு இன்னும் நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டுதான் இருக்கிறது. அவ்வாறுதான் சிராஸ் மீரா சாஹிபும் பதவிக்காக கட்சியை விட்டுச்சென்றவர் தான். தன்னை கல்முனை மாநகர சபை  மேயர்பதவியில் தொடர்ந்தும் வைக்கவேண்டும் என்று சண்டைபிடித்தார். சுழட்சி முறையில் அந்தப் பதவி வழங்கப்படக்கூடாது என்பதே அவரது வாதமாக இருந்தது.பதவிக்காக எந்த கட்சியிலும் சேர தயாராக இருக்கின்ற இவரின் செல்வாக்கு ஜெமீல் அளவுக்குக்கூட இல்லை எனலாம்.
அத்தோடு சிராஸ் மீரா சாகிப் மற்றும் ஜெமீல் ஆகியோருக்கிடையிலான அதிகாரத்திற்கான பனிப்போர் இப்போது உச்ச நிலையில் இருக்கிறது. இது கூட இவர்களின் வாக்கு வங்கியில் சரிவினை உண்டு பண்ணும். வி.சி .இஸ்மாயில் மற்றும் பொத்துவில் மஜீத் ஆகியோர் மக்கள் மத்தியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அபிமானம் பெற்றவர்களில்லை எனவே தான் ஹசன் அலி அவர்களின் செல்வாக்கினை பயன்படுத்தி அம்பாறையின் ஆட்சியினை கையகப்படுத்தலாம் என நினைக்கிறார். எனவே அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் கூட்டமைப்பானது ஒருவேளை அமைக்கப்பட்டாலும் அது பிசுபிசுத்து போகும்.
அம்பாறை மாவட்டடமானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாகும். அந்தக் கட்சியை அழிக்கின்ற அல்லது பலவீனப்படுத்துக்கின்ற எந்தவிதமான முன்னெடுப்புக்களும் அங்கே வெற்றியளிக்க மாட்டாது. அதனை அங்கேயுள்ள உண்மையான கட்சிக்கு விசுவாசமாக இருக்கின்ற போராளிகள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது காலம் கற்றுத்தந்த பாடமாகும்.
farsan
By farsan July 17, 2017 05:47
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*