இலங்கை முஸ்லிம்கள் உலக முஸ்லிம் சமூகத்தின் ஓர் அங்கம்

adminslmc
By adminslmc March 8, 2017 06:35 Updated

இலங்கை முஸ்லிம்களென நாம் சிந்திப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வாறே நாம் உலக முஸ்லிம் சமூகத்தின் ஓர் அங்கமென்ற உணர்வை மனதில் கொள்வதாகும். இவ்விரு சிந்தனைகளும் ஒன்றைவிட்டு மற்றது பிரியமுடியாதவாறு என்றும் பின்னிப் பிணைந்திருக்க வேண்டியவை.

அநாகரிகமான சமூகத்தின் பிரதிநிதிகளாயும் “அய்யாமுல் ஜாஹிலிய்யாவின்” பிம்பங்களாகவும் வாழ்ந்தவர்களையும் சமூகத் தலைவர்களாய் கண்ணியம் படைத்தோராய் உலக வரலாற்றுப் போக்கையே திசைதிருப்ப வல்லமை பெற்றவர்களாய் மாற்றிய தனிப் பெருமை இஸ்லாத்துக்கே உரித்தானது.

பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றிய ஸஹாபாப் பெருமக்களும் எந்த அல்லாஹ்வை வணங்கினார்களோ அதே அல்லாஹ்வையே இலங்கைமுஸ்லிம்களாகிய நாமும் வணங்குகிறோம். அதே குர்ஆன், அதே தூதர், அதே கிப்லா அப்படியிருந்தும் ஏன் இலங்கைவாழ் முஸ்லிம் சமூகம் அதே கௌரவத்தையும் கண்ணியத்தையும் பெறத்தவறியது என்பதைப்பற்றி சிந்திக்காமல் இனியும் நாம் இருக்க முடியாது. அது மாத்திரமல்ல நாம் இலங்கையில் சிறுபான்மையினர்.

எனவே இஸ்லாமிய போதனைகளை முஸ்லிம் சமூக வாழ்வில் ஏற்படுத்த முடியாது என்ற நிலைப்பாட்டையும் நாம் எடுக்க முடியாது. இஸ்லாமிய வாழ்வு நெறிகளைத் தனிவாழ்விலும் சமூகக் கூட்டு வாழ்விலும் பிரதிபலிப்பது எமது அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமையென்பதையும் நாம் மனதில் வைத்திருக்க வேண்டும்.

அரசியல் வேறு, ஆத்மீகம் வேறு என எண்ணி வாழ்ந்த மக்களுக்கு இஸ்லாம் என்பது பரிபூரணமானதும் உன்னதமானதுமான வாழ்க்கைத்திட்டம் என்பதைப் போதித்து பெருமானாரின் வழித் தோன்றல்களாகிய நாம் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பிருந்த அதேநிலையில் எமது அரசியலுக்கும் ஆத்மீகத்துக்குமிடையே பெரும் சுவரொன்றைக் கட்டி வைத்துக் கொண்டிருக்கவில்லையா என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஊழலும் தார்மீகப் பண்புகளுக்கு முரண்பட்டதுமான இன்றைய அரசியல் போக்குகளை அல்குர்ஆனினதும் பெருமானார் (ஸல்) அவர்களினதும் போதனைகளினாலும் மாற்றியமைக்க வேண்டியது எமது ஆத்மீக கடமையைச் செய்யாமல் பராமுகமாக நாம் வாழவில்லையா என்பதனையும் சிந்தித்துப் பாருங்கள்.

ஆத்மீகத் தலைமைத்துவம் வேறு, அரசியல் தலைமைத்துவம் வேறு எனப்பிரித்துக் கொண்டதனால் ஆத்மீகப் பண்புகளுக்கு மாறுபட்ட அரசியல் தலைமைத்துவத்தை அந்தக் கூரியமுள்ளான கிரீடத்தை எமது தலைகளிலே நாம் சூடிக் கொண்டிருப்பது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானது என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அது மாத்திரமன்றி அரசியல் விவகாரங்களில் அக்கறை எதுவுமின்றி இருந்ததன் காரணமாக எமது ஆத்மீகத் தலைமைத்துவத்தை அரசியல்வாதிகள் பகடைக்காயாகப் பாவித்ததையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நீங்கள் உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு பிரிந்துவிடாதீர்கள், இஸ்லாம் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் (3:103) என்று குரலெழுப்பிக் கொண்டிருக்கும் அல்குர்ஆனுக்கும் எமது உண்மையான பிரிவுண்ட நிலைக்கும் இடையேயுள்ள தூரமும் நீளமும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. சண்டையும் சச்சரவும் மலிந்து கிடக்கும் நம் சமூகத்தில் அந்த ஒற்றுமைக் கயிற்றைத் தேடிப் பொறுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. விளைவு, நாம் பல இலட்சக்கணக்கானோர் என சொல்லிக் கொண்டபோதும் கூட இந்த நாட்டு அரசியல் அரங்கில் எமது சமூகம் உரிய தாக்கத்தை ஏற்படுத்தத்தவறியதாகும். எந்தச் சமூகம் ஒரு நாட்டு அரசியல் விவகாரங்களில் தனித்துவத்துடன் பங்கெடுத்துக் கொள்ளவில்லையோ அந்த சமூகத்தின் தனித்துவமும் அந்த தனித்துவத்தின் அடிப்படைகளும் அந்த நாட்டில் நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கமுடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என்பதைப் புரியாதோர் எம்மில் சிலரே.

இந்த நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னுள்ள முஸ்லிம் சமூக வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பாருங்கள். பிரஜாவுரிமைச் சட்டம், தனிச் சிங்கள மொழித்திணிப்பு, திட்டமிட்ட அரச குடியேற்றங்கள், புதைபொருள் ஆய்வுகளும் புனித நகர அமைப்புக்களும் புத்தளப் பள்ளிவாசலில் எம் சகோதரர்கள் எதுவித காரணமுமின்றி சுட்டுக் கொல்லப்பட்ட சோக காவியம், காலியில் ஏற்ப்பட்ட கறைகள், தமிழ்மொழி மூலம் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழியைப் படிக்க அவசியமில்லாத நிலை, பள்ளிவாசல்களை சுதந்திரமாகக் கட்டமுடியாத அவலம், பள்ளிவாசல்களிலிருந்து ஒலிபெருக்கிகள் மூலம் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அழைப்பதிலுள்ள தடைகள், முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மாறாக இஸ்ரவேலர்களை இந்த நாட்டுக்குள் கொண்டு வந்தமை, தனியார் சட்டங்களை ஒருமுகப்படுத்தும் தோரணையில் இஸ்லாமிய சமூகத்தின் அத்திவாரமான ஷரீஅத் சட்டங்களிலேயே கைவைக்கத் துணிந்த எதேச்சாதிகாரப் போக்கு, பள்ளிவாசல்களும், உலமாக்களும், ஆசிரியர்களும் படிப்படியாக அரசியல்வாதிகளுக்கு அடிமையாக்கப்படும் அநியாயம், அரசியல் கட்சி மாநாட்டில் முஸ்லிம் சமூகம் பிரதிநிதித்துவம் இன்றி அவமதிக்கப்பட்டமை, கொத்தணிக் கல்வி முறை முஸ்லிம் சமூகத்துக்கெதிராக தாக்கப்பட்டிருக்கும் பிரகடனம் செய்யப்படாத போர்க்கொடி, கலை இலக்கிய சமூகத்தை வேண்டுமென்றே அவமதிக்கும் போக்கு, பெருமானார் (ஸல்) அவர்களுக்கே உருவம் வரைந்து அவமதிக்கும் கொடுமை, இஸ்லாத்துக்கு விரோதமான அந்நிய கலாசாரத்தின் ஊடுருவல் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தில் இருந்த 12.5மூ வெட்டுப்புள்ளி இன்னும் இருக்கும் மாவட்ட போனஸ் ஆசன முறை, பிரதேச சபைகள் உருவாக்கப்பட்ட போது முஸ்லிம் சமூகத்தின் அபிப்பிராயம் தூக்கி வீசப்பட்டமை. 1986 டிசம்பர் 19 பிரேரணையில் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் இந்திய அரசிடம் தாரை வார்க்கப்பட்டமை, இனப்பிரச்சினைப் பேச்சு வார்த்தைகளில் ஏற்படும் முன்னேற் றங்களை கிழக்கிலங்கை முஸ்லிம் எம்.பிக்கள் மூலமாக முறியடிக்கச் செய்யப்பட்ட முயற்சிகள், ஈதுல்பித்ர் பெருநாளைக் கூட அரசாங்கப் பொது விடுமுறையாகப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை, இலங்கை – இந்தியா சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டபோது கிழக்கிலங்கை முஸ்லிம்களின் அபிலாஷைகள் தூக்கியெறியப்பட்டதும் எவ்வித பாதுகாப்புமற்ற அரசியல் அனாதைகளாக கிழக்கிலங்கை முஸ்லிம்கள் மாற்றப்பட்டமை.

வடக்கு – கிழக்கு மாநில அதிகாரப் பங்கீடுகள் பற்றிய பேச்சு வார்த்தைகளை முஸ்லிம் சமூகத்தின் பின்னால் செய்யும் அவல நிலை வடக்கு – கிழக்கு மாநிலத்தில் முஸ்லிம் சமூகத்தின் நிச்சயமற்ற எதிர்காலம் இப்படிப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம்.

இவை எல்லாவற்றுக்கும் காரணமென்ன? எமது ஒற்றுமை இன்மையும் எமக்கென சுதந்திரமும் சுயமாரியாதையுமுள்ள இஸ்லாமிய அடிப்படையிலான அரசியல் தலைமைத்துவம், பிரதிநிதித்துவம் என்பன இல்லா மையல்லவா!

கட்சி அரசியலால் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்தை எப்படி ஒற்றுமைப்படுத்த முடியும் என்பதைப் பற்றியும் ஆத்மீக அடிப்படைகளுக்கு தோற்றுவிக்கலாம் என்பதைப் பற்றியும் எம்மில் எவரும் முழுமையாகச் சிந்தித்துச் செயலாற்றவில்லை. யாதார்த்தமான பிரிவினைகளையும், எமது பார்வை யிலுள்ள வேறுபாடுகளையும், கண்டும் காண முடியாதவர்களாக நாம் மாறியிருப்பது எமது துரதிஷ்டமேயாகும்.

எமது சமூகத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டுமாயின் அதைப் பிரித்துவைக்கும் பலவித சக்திகளையும் நாம் முதலில் இனம் காணவேண்டும். இவற்றில் முதன்மையானவை பேரினவாதக் கட்சிகள் என்பதை மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஏற்றுக் கொள்வான்.

பேரினவாதக் கட்சிகளினால் பிளவுண்ட எமது சமூகத்தை ஒன்றுபடுத்த உள்ள ஒரேயொரு வழி அப்பேரினவாதக் கட்சிகளை முஸ்லிம் சமூகத்தின் ஆதரவிலிருந்து அகற்றிவிடுவதும் இஸ்லாமிய அடிப்படையில் முஸ்லிம்களை ஒன்றுபடுத்துவதுமேயாகும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஒவ்வொரு வாக் காளனும் ஏதாவது ஒரு கட்சியை ஏற்றுத்தான் ஆகவேண்டியுள்ளது. இச்சூழ்நிலையில் சிங்கள, தமிழ் சமூகங்களைப் பிரதிநிதித்து வப்படுத்த சிங்கள, தமிழ்அரசியல் கட்சிகள் இருக்கும் போது முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்ய ஒரு முஸ்லிம் அரசியற் கட்சி இல்லாமலிருந்த குறையை முஸ்லிம் காங்கிரஸ் நிறைவு செய்துள்ளது.

இப்பின்னணியில் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று பல்வேறு பேரினவாதக் கட்சிகளிலும் தொடர்ந்தும் உழைத்துக்கொண்டு அவமானப்படுவது மற்றது முஸ்லிம் அரசியல் கட்சியைப் பயன்படுத்துவது முஸ்லிம் அரசியல் கட்சியை உறுதிப்படுத்துவதன் மூலம் பல இலட்சக்கணக்கான முஸ்லிம் வாக்குகளை ஒன்றுபடுத்துவது மாத்திரமன்றி முஸ்லிம் வாக்குகள் என்ற புதிய கோட்பாடு ஒன்றை இந்த நாட்டு அரசியலிலும் இன்ஷா அல்லாஹ் எம்மால் பதிக்கமுடியும்.

ஒரே கல்லில் இரு மாங்காய்கள் என்பது போல் சுதந்திரமான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுகின்ற அதேவேளை புனித குர்ஆனின் பக்கமும் பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டிய வழி முறைகளின் பக்கமும் முஸ்லிம் சமூகத்தை வழிநடத்த முடியும். வெகுவிரைவில் எல்லா மட்டங்களிலும் புதிய தலைமைத்துவத்தை உருவாக்க முடியும் எந்தத் தலைவர் தொழுகையில் இமாமாக நின்று அல்லாஹ்வை அணுகுவதற்கு வழிகாட்டுகின்றாரோ அதேதலைவர் எமது அரசியல் தலைவராக மாறுகின்ற ஓர் இஸ்லாமிய அமைப்பை இன்ஷா அல்லாஹ் எம்மால் ஏற்படுத்த முடியும். “அல்லாஹ்வுக்கும் அவனது றஸ{லுக்கும் உங்கள் தலைமைத்து வத்துக்கும் கட்டுப்படுங்கள்” என்ற குர்ஆனின் போதனைகள் உயிரோட்டம் பெறும் வாய்ப்பு முஸ்லிம் அரசியற் கட்சியினூடாக ஏற்படும் சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளன.

பலமிக்க முஸ்லிம் அரசியற் கட்சியின் கீழ் பலமிக்க முஸ்லிம் சமூகமொன்று உருவாகும். ஒரே உணர்வுடனும், ஒரே இலட்சியத் துடனும் ஒருவரை ஒரு வர் பிணைத்துக் கொண்ட பலமிக்க முஸ்லிம் காங்கிரஸ் கிளைகளை ஏற்படுத்தலாம் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சொந்தச் சகோதரர்கள் போல் ஏற்கனவே வாழத் தொடங்கி யுள்ளனர். இத்தகைய முஸ்லிம் காங்கிரஸ் குடும்பங்களின் அங்கத்தவர்களை அத்தி வாரங்களாகப் பயன்படுத்தி பள்ளிவாசல்களை மையமாகக் கொண்ட முஸ்லிம் சமூக நிர்வாக ஸ்தானங்களை உருவாக்க முடியும். முஸ்லிம் சமூகத்தின் சகல விடயங்களிலும் ஷரீஆ சட்டத்தின் கோவை சட்ட ரீதியாக அமுலாக்கக் கூடியதாக சட்ட மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

எமது சொந்தக் கால்களிலேயே நின்று கொண்டு இறைவனதும் இறைதூதரினதும் போதனைகளின் அடிப்படையில் நமது நிர் வாகங்களை நாமே நிர்வாகிக்கும் ஓர் புதிய உலகத்தை உருவாக்க முடியும். நாம் அல்லாஹ்வின் பிரதிநிதிகள், இறைவனைத் தவிர வேறுயார்க்கும் அடிமைகளல்ல என்ற யதார்த்த நிலையை உணரும் புதிய சமூகம் விரைவில் தோன்றும் எல்லா அறிகுறிகளும் ஏற்கனவே உருவாகிவிட்டன.

ஐங்காலத் தொழுகையையும், ஸக்காத்தையும் நிலைப்படுத்தி நோன்பு, ஹஜ் கடமைகளை நிறைவேற்றி முஸ்லிம் சமூகத்தின் அடையாளங்களுடன் நடமாடும் உரிமைகளைப் பாதுகாத்தல் ஒவ்வொரு பள்ளி வாசல்களையும் அடிப்படையாக வைத்து பைத்துல்மால் என்னும் இஸ்லாமியத் திறைசேரியை நிறுவுதல், அத்திறை சேரியினூடாக ஸக்காத் எனும் தனிமனித கடமையை நிறை வேற்றுவதன் மூலம் எமது சகோதரிகளும் தாய்மாரும் சிறுவர்களும் ரமழான் மாதத்தின் பட்டினிப் பட்டாளங்களாய்ப் படையெடுக்கும் நிலையை இல்லாதொழித்தல் அவர்களுக்குச் சேரவேண்டியதை அவர்களின் காலடிகளுக்கே கொண்டு சென்று வழங்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் வறுமையை முற்றாக ஒழிக்க முயலுதல் தனியார் கூட்டுத் தொழில் வாய்ப்புக்கள் – உணவு உடை உறைவிடம் வைத்திய வசதிகள் கல்வி என்பன போன்ற அடிப்படைத் தேவைகள் தனிமனிதனின் சுமையாகத் தொடர்ந்தும் இராமல் அச்சுமைகளைத் தன்மீது மகிழ்ச்சியுடன் பொறுப்பேற்கும் புதிய சமூக அமைப்புக்களை உருவாக்குதல்.

இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களுக்கு முரணாக உள்ள இந்நாட்டின் சட்டங்களை இனங்கண்டு இயன்றவரை குர்ஆன், சுன்னாவின் மூலாதாரங்களுடன் ஒத்துவரக்கூடிய வகையில் அவற்றின் அடிப்படையில் அவற்றைத் திருத்துவதற்காகவும் மாற்றுவதற்காகவும் குரல் கொடுத்துத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் – அநீதிகளையும், சுரண்டல்களையும், ஊழல்களையும், ஒழுக்கச் சீர்கேடுகளையும் இல்லாதொழித்தல், இஸ்லாமிய சட்ட வரம்புகளுக்கமைய தனியார் பொருள் விருத்திக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தும் அதேவேளை சமூகத்தில் கூட்டுச் சொத்துக்கள் என்ற புதிய கோட்பாட்டை அறிமுகம் செய்து அதன் வளர்ச்சிக்காக உழைத்தல் குர்ஆனை ஓதுவதற்காக மாத்திரம் பயிற்சியளிக்கும் ஓதப்பள்ளிகளை மாற்றியமைத்து குர்ஆனின் கருத்தையும் அறிந்து கொள்ளும் குர்ஆன்பாடசாலைகளை உருவாக்குதல் – அல்குர்ஆன் பாடசாலைகள் மூலம் குர்ஆனினதும், சுன்னாவினதும் பூரணத்தூதில் சிறுவர்கட்கும், இளைஞர்கட்கும், முதியவர்கட்கும் பயிற்சி அளித்தல், சிங்களம் மாத்திரம் அரச மொழியல்லாது சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் தேசிய மொழிகளாகப் பிரகடனம் செய்தல், இந்நாட்டு முஸ்லிம்களின் மத்தியில் அறபு மொழி கற்றலை ஆர்வப்படுத்தல், அறபு மொழியை இலங்கையின் சர்வதேச மொழியாக பிரகடனம் செய்தல்.

ஒவ்வொரு தொழிலுக்கும் ஒழுக்கக்கோவை இருப்பது போல் அரசியலில் ஈடுபடுகின்றவர்களுக்கென உயர்ந்த தரத்திலான ஒழுக்கக் கோவையை ஏற்படுத்துமாறும் அந்த ஒழுக்கக் கோவையின் விதிகள் சட்ட வலுப்பெறுதல் வேண்டியும் பாடுபடல் அடிப்படை உரிமைகள்மீதுள்ள அனாவசிய தடைகளையும் கட்டுப்பாடுகளையும் நீக்குதல், நீதியின் ஆட்சிக்காலம் நீதித்துறையின் சுதந்தி ரத்திற்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தல், உலமாக்க ளுக்கும், கதீப் மார்களுக்கும் தலைமைத்துவப் பயிற்சியளித் தல், ஆசிரியர்களின் பொருளா தாரஅவல நிலையைப் போக்கிசமூகத்தில் உன்னதமானதும் கௌரவமானதுமான தொழிலைச் செய்யும் ஆசிரியர்களை சமூகத்தின் கண்ணியமுள்ள அங்கமாக அங்கீகரித்து அவர்களின் வாழ்க்கைக்குப் போதுமான வருமானத் தைப்பெற வழிசெய்தல், வட்டி, சூது, இலஞ்சம், விபசாரம், போதைப்பொருள் போன்ற ஒழுக்கக் கேடுகளை சமூகத்தை விட்டும் அகற்றுதல், வட்டியில்லாப் பொருளாதார முறையை இந்த நாட்டிலேற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல், இஸ்லாம் கட்டாயப் பாடமாக இருக்கும் நிலையை உறுதிப்படுத்தல், உழைப்புக்கேற்ப ஊதியம் கிடைப்பதற்கான வழிகளைச் செய்தல், உழைப்புக்கேற்க ஊதியம் கிடைத்தும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க முடியாதவர்களின் தேவைகளைப் பொதுத் திறைசேரி மூலம் நிறைவேற்றும் நிலையை ஏற்படுத்துதல், தொழில் பெறும் உரிமை அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தல் தொழில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வரை அன்றாட அடிப்படைத் தேவைகளை தொழிலில்லாதவர்களுக்கு அரசு வழங்கும் ஒரு நிலையை ஏற்படுத்தல் வறுமையை ஒழித்தல் முதியோருக்கும் அநாதைகளுக்கும் விஷேட வசதிகளை ஏற்படுத்தல் சகலருக்கும் சமசந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் அநீதி கொடுமை அங்கீகாரம் இனவெறி சாதிப்பாகுபாடு என்பவற்றிற்கு எதிராக போராடல்.

இந்த நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கு இஸ்லாமியத் தீர்வுகளை அறிமுகப்படுத்தல் சகல பிரஜைகளுக்கும் சமமானவர்கள், பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவனுக்கு அதிக உரிமை சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவனுக்கு குறைந்த உரிமை என்ற நிலையை மாற்றியமைத்தல், சகல மதங்களுக்கும் சமமானஅந்தஸ்தும் விகாரைகளுக்கும் கோயில்களுக்கும் தேவாலயங்க ளுக்கும் பள்ளிவாசல்களுக்கும் சமமான பாதுகாப்பு வசதிகளையும் இந்நாட்டில் உறுதிப்படுத்தல், தான் விரும்பும் மத நம்பிக்கையை தனித்தும் கூட்டாகவும் பின்பற்றி நிலைநிறுத்தும் மனித அடிப்படை உரிமையைப் பாதுகாத்தல், அத்தகைய உரிமைகள் மீதான நேரடி மறைமுக குறுக்கீடுகளுக்கு எதிராகப் போராடுதல், சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வுகளையும் நட்பு நிலையையும் ஏற்படுத்துதல், சட்டத்தின் முன் யாவரும் சமம் எனும் கோட்பாட்டினை அமுலாக்குதல், எல்லா மக்களினதும் உரிமையும் உடமைகளும் உயிர்களும் புனிதமானவையாயும் தாய்மையானவையாயும் கருதப்பட்டு அவற்றைப் பாதுகாப்பது அரசின் கடமை என்பதை நிலைநாட்டுதல்.

மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அவன் இறைவனுக்கு பதில்கூற வேண்டியவன் எனும் இறையச்ச உணர்வை ஏற்படுத்து தல், அரசியல் பழிவாங்கலை இல்லாதொழித்தல், பெண்ணுரிமைக்கு மதிப்பேற்படுத்தல், பெண்களை ஆண்களின் அடைக்கலப்பொருட்கள், அன்பாகவும், கண்ணியமாகவும் இரக்கமாகவும் நடாத்தப்பட வேண்டியவர்கள் என்பதை எடுத்துக் கூறி பெண்களைப் பொறுத்தவரை ஆண்களுக்கிருக்கும் கடமைப்பாடு களை எடுத்தக் கூறுதல், குற்றமொன்று செய்யப்படும் போது அதற்காக அக்குற்றம் செய்பவனைத் தவிர வேறுயாரும் தண்டிக்கப்படலா காது என்னும் இஸ்லாமிய சட்ட அடிப்படையை உறுதிசெய்தல் என்பன போன்ற இன்னோரன்ன இஸ்லாமிய அரசின் அடிப்படைத் தத்து வங்களை சிங்கள, தமிழ் சமூக சகோதரர்களுக்கு எடுத்துக்கூறி அத்தத்துவங்களின் பக்கம்அவர்களை ஈர்ப்பதும் முஸ்லிம் அரசியல் கட்சியின் பெரும் பணியாகும். இன்ஷா அல்லாஹ், சுகமும் வளமுமுள்ள முஸ்லிம் அரசியல் கட்சியில் இத்தகைய எண்ணற்ற ஆக்கபூர்வமான பணிகளை ஆற்றுவதற்கான வாசல்களை திறந்துவிட முடியும். உண்மையான முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு மத்தியில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டதும் வேறுபட்ட துமான அரசியல் கொள்கைகள் இருக்க முடியாது. அவ்வாறு இருக்கும் வரை முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்த முடியாது.

அவ்வாறு ஒன்றுபடுத்தாத பட்சத்தில் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் வேறுபட்ட நிரந்தர கூறுகளாக இருப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. எனவேதான் முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தக்கூடிய ஒரேயொரு சாதனம் இலங்கை முஸ்லிம்களுக்கான தனியான அரசியற் கட்சி என்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நம்புகிறது.

இஸ்லாம் எனும் கொள்கையை பரிபூரணமாக ஏற்றுக் கொண்ட வர்களே முஸ்லிம்கள், இக்கொள்கையே முஸ்லிம் சமூகத்தின் தனித்துவம், இலங்கை முஸ்லிம் சமூகம் இந்நாட்டு அரசியலிலிருந்து பிரிக்கப்படவும், புறக்கணிக்கப்படவும் முடியாத தனித்துவமிக்க ஒன்று என்பதை நாம் மறந்துவிட முடியாது. இந்நாட்டைக் குட்டிச் சுவராக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வினைக்காணும் பணியில் எமக்கிருக்கும் பங்கு முக்கியமானது என்பதையும் நாம் மறந்து விட முடியாது.

அதேவேளை கிழக்கிலங்கையில் வசிக்கும் முஸ்லிம் சமூகம் புதிதாக அமைய இருக்கும் வடக்கு – கிழக்கு அரசியலில் மட்டுமல்ல முழு நாட்டிலும் நிரந்தரமான கௌரவமான அந்தஸ்த்தைப் பெறத் தேவையான முயற்சிகளை நாம் இப்போதிருந்தே மேற்கொள்ள வேண்டும்.

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு நிபந்தனையற்ற ஆதரவை நாம்வழங்க முடியாது என்பதுவே முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடா கும். வடக்கு கிழக்கு இணைப்பு ஏற்படுவதானால் அது நிரந்தரமான ஒன்றாயிருக்கும் பட்சத்திலேயே தமிழ் சகோதரர்கள் நிம்மதியாகப் பெருமூச்சு விடமுடியும். இல்லையெனில் அவ்வாறின்றி வடக்கு கிழக்கு இணைப்புக்கு இணங்க அரசாங்கம் முன்வருவது மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்களின் கண்களில் மண் போடும் முயற்சியாக அமையலாமென முஸ்லிம் காங்கிரஸ் அஞ்சுகிறது.

கிழக்கு மாகாண மக்களின் அபிப்பிராயத்தைக் கேட்காமல் வடக்குடன் கிழக்கை இணைக்க முயலுவது கிழக்கிலங்கை மக்களின் அரசியல் உரிமைகளையும் சுய நிர்ணய உரிமைகளையும் அவமதிக்கும் செயலாகும். வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்த பின் கிழக்கு பிரிய வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை கிழக்கிலங்கை மக்களிடம் ஒரு சர்வஜன வாக்குரிமை மூலம் விட முயற்சிப்பது கிழக்கில் இரத்தக் களரியைத் தோற்றுவிக்க முயலும் விஷமத்தனமான ஒன்றாகும்.

டிசம்பர் 19 பிரேரணைகளை முஸ்லிம் காங்கிரஸ் முற்றாக நிராக ரித்தது கிழக்கிலங்கை முஸ்லிம்களின் எதிர்காலத்தை இந்திய அரசிடம் தாரைவார்க்கும் அப்பிரேரணைகளை கிழக்கிலங்கை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தற்போதைய கிழக்கி லங்கை ஐந்து முஸ்லிம் எம்.பிகளுக்கும் இனப்பிரச்சினைத் தீர்வு களில் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமை கிடையாது என்பதுவே முஸ்லிம் காங்கிரஸின் தெளிவான நிலையாகும்.

முஸ்லிம் சமூகத்தினதும் சிங்கள சமூகத்தினதும் அரசியல் பங்கையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியதன் பின்னர் வடக்கு, கிழக்கு இணைப்பை நிரந்தரமாகச் செய்வதனாலயே தமிழ் சகோதரர்களின் துன்பங்களுக்கு நிரந்தரமான பரிகாரத்தை காணமுடியுமென்பதே முஸலிம் காங்கிரஸின் தெளிவான நிலையாகும்.

கிழக்கிலங்கையின் எதிர்காலம் என்ற மாயயையில் சிக்குண்டு கிடக்காது கிழக்கிலங்கைச் சிங்கள சகோதரர்களின் எதிர்காலம்கிழக்கிலங்கைத் தமிழ் சகோதரர்களின் எதிர்காலம் கிழக்கி லங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் என்ற அடிப்படையில் இவ்வி னப்பிரச்சினை அணுகப்பட வேண்டுமென நாம் இலங்கை இந்தியஅரசாங்கங்களை மாத்திரமன்றி தமிழ் விடுதலை அமைப்புக்க ளையும் வேண்டுகின்றோம்.

வடகிழக்கு இணைப்பு ஏற்படும் பட்சத்தில் முஸ்லிம் சமூகத்துக்கான ஆகக்குறைந்த பாதுகாப்பு முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை ஒன்றை ஏற்படுத்துவதாகும் என்பதையும் முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்துகின்றது. இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்ற கிழக்கிலங்கை முஸ்லிம் சமூகத்தினருக்கும் அடிப்படை உரிமையை நாம் வலியுறுத்திக் காட்டவேண்டும். எமது பிற்காலச் சந்ததி கண்ணியத்துடனும் அடிமைத்தளைகளில்லாத சுதந்திரப் பறவைகளாகவும் இந்த மண்ணில் நடந்தும் பறந்தும் திரிவதற்கு அவசியமான சகல நடவடிக்கை களையும் உடனடியாக நாம் மேற்கொள்ள வேண்டும்.

நாம் இவ்வளவு காலமும் தூங்கியதன் காரணமாய் நமது சமூகத்தின் தனித்துவத்தை அங்கீகரிக்க மறுத்த மறுக்கின்ற சக்திகளுக்கு முஸ்லிம் சமூகம் விழித்துக் கொண்டது என்பதை இனியேனும் நாம் நிரூபித்துக் காட்டல் வேண்டும்.

 

adminslmc
By adminslmc March 8, 2017 06:35 Updated
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

Recent Comments

  • adminslmc

    adminslmc

    முஸ்லிம் பாடசாலைக்கு 3 மாடிக் கட்டிடத்தை வழங்கவுள்ள பௌத்த தேரர்

    View Article
  • k.m.m.Maharoof

    k.m.m.Maharoof

    I am a founder member in Slmc.i am in Wellampitiya.but no any Slmc members half me the flood…

    View Article
  • thaj

    thaj

    அபிவிருத்தி எனும் மாயைக்குள் நாம் அகப்பட தேவையில்லை, எமது நாட்டின் கடன் சுமையை குறைப்பதற்கு உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கச் செயதல் அவற்றிற்கு…

    View Article